சிறுபிள்ளைத்தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம்! – மக்களிடம் ரணில் கோரிக்கை

சிறுபிள்ளைத்தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்து மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொள்ளக்கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் பாதுகாத்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் வரிகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஏற்றுமதித் துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என்றும், ஏற்றுமதித் துறையினருடன் பேச்சு நடத்தி, கிரமமாக இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

சஜித்தும் அநுரவும் இன்று மக்களுக்குப் போலியான அரசியல் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர் என்றும், பிள்ளைகளினதும் தங்களதும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜா – எல நகரில் நேற்று (30) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.