குழியில் விழுந்த பெண்ணைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்தபோது குழியில் விழுந்த விஜயலெட்சுமி என்ற பெண்ணைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
இந்தியாவைச் சேர்ந்த 48 வயது விஜயலெட்சுமி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (23 ஆகஸ்ட்) அந்தக் குழியில் விழுந்தார்.
அவரைத் தேடும் பணிகள் 9 நாள்களாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவை அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மலேசியாவின் The Star இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள், தொழில்நுட்ப அறிவுரைகள் ஆகியவற்றை நன்கு பரிசீலித்தப் பின்னரே மீட்பு, தேடல் பணிகளை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக மலேசியப் பிரதமர் துறை அலுவலக அமைச்சர் கூறியுள்ளார்.
தேடல் பணிகள் நிறுத்தப்பட்ட தகவல் குழியில் விழுந்த திருமதி விஜயலெட்சுமியின் குடும்பத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாப்பா (Dr Zaliha Mustafa) சொன்னார். மலேசியாவுக்கான இந்தியத் தூதரகத்துடன் தாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் காவல்துறை முடிவெடுக்கும் என்றார் அவர்.
கோலாலம்பூர் சுற்று வட்டாரப் பகுதியில் மண்ணின் நிலைத்தன்மை குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.
உள்ளூர் வியாபாரங்கள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கோலாலம்பூர் நகர மண்டபம் பேசி முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நகர மண்டபத்தைத் தாம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.