மிகவும் பசித்ததால் வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்தேன்: மன்னிக்கவும் ‘ – திருடன் விட்டுச்சென்ற கடிதம்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வீடுகளுக்குள் புகுந்து கடிதம் விட்டுச்செல்லும் ஒருவரை அதிகாரிகள் தேடுகின்றனர்.
யேல்ம் (Yelm) வட்டாரத்தில் கிளியர்வூட் (Clearwood) பகுதியில் ஒருவர் தனது வீட்டுக்குள் சென்றபோது மேசையில் ஒரு கடிதத்தைக் கண்டார்.
‘எனக்கு மிகவும் பசித்ததால் வீட்டிற்குள் புகுந்தேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களுடைய உணவைச் சாப்பிட்டேன். நான் குளித்தேன்…ஆடைகளைச் சலவை செய்தேன்,’ என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
வீட்டின் சன்னல் உடைந்திருப்பதையும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடப்பதையும் கண்ட எடி அன்டுஜோ (Eddie Andujo) என்ற ஆடவர் அதிர்ச்சியடைந்தார்.
ஆனால் வீட்டிலிருந்து எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை.
வீட்டுக்குள் புகுந்தவர் தாம் பயன்படுத்திய போர்வைகளை மடித்து வைத்திருக்கிறார்…தட்டுகளைக் கழுவி வைத்திருக்கிறார்….
அடுத்த சில நாள்களில் அண்டை வீடுகளிலும் ஒருவர் அத்துமீறிப் புகுந்தது தெரியவந்ததாக King5 எனும் உள்ளூர்ச் செய்தி நிறுவனம் சொன்னது.
சில முறை சந்தேகத்திற்குரிய ஆடவர் வீட்டிலிருந்து வெளியேறி ஓடுவதை அவர்கள் பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் அதிகாரிகள் K9 பிரிவு மோப்ப நாய்களுடன் இணைந்து வட்டாரத்தில் சந்தேக நபரைத் தேட முயன்றனர்.
ஆனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று King5 கூறியது.