சஜித்துக்கே தமிழரசு ஆதரவு – தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் போட்டியில் இருந்து உடன் விலக வேண்டும் என மத்திய குழுவில் தீர்மானம் என்கிறார் சுமந்திரன்.
“வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. அத்துடன் தமிழ்ப் பொது வேட்பார் பா.அரியநேத்திரன் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று பல மணி நேரமாக வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் பல மணிநேரமாக இடம்பெற்றது. இதில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதுவரை எமது கட்சி தீர்மானம் எதனையும் அறிவிக்காமையால் கட்சி உறுப்பினர்கள் பலவாறாகச் செயற்பட்டனர். தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டு சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால் கட்சி உறுப்பினர்கள் அதற்கேற்றவாறு செயற்படுவார்கள்.” – என்றார்.
இன்றைய தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்கேற்கவில்லை. அதேவேளை, கட்சியின் முக்கியஸ்தர்களான சிவஞானம் சிறீதரன் எம்.பி., சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. ஆகியோர் இலண்டன் சென்றுள்ளமையால் அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.