மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் குழிக்குள் தவறி விழுந்த விஜயலட்சுமிக்கு இறுதிச்சடங்கு.
இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி, 48, என்பவர் ஆகஸ்ட் 23ஆம் தேதி கோவிலுக்குச் செல்லும் வழியில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் எட்டு மீட்டர் ஆழ குழிக்குள் தவறி விழுந்தார்.
அவரைத் தேடி மீட்கும் பணிகள் ஒன்பது நாள்களாக நடைபெற்றன. ஆயினும், அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் பாதுகாப்புக் கருதியும் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் நலன் கருதியும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா பணி நிறுத்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அடுத்த நடவடிக்கை பற்றி காவல்துறை முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மீட்புப் பணியின் ஒன்பதாவது நாளில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த வட்டார நகைக்கடை ஊழியரான இப்ராகிம் என்பவர், மக்கள் வருகையின்றி மஸ்ஜித் இந்தியா வெறிச்சோடிக் காணப்பட்டதாகக் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்த முதல் நாளில் மூடப்பட்ட கடை சில நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் வருவது வெகுவாகக் குறைந்தது என்றார் அவர்.
விஜயலட்சுமிக்கு இறுதிச்சடங்கு
இதற்கிடையே, குழிக்குள் விழுந்த காணாமல்போன விஜயலட்சுமிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) இறுதிச்சடங்கு நடத்தினர்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் விஜயலட்சுமியின் கணவர், மகன், சகோதரி ஆகியோர் பங்கேற்றதாக அஸ்டோ அவானி செய்தி ஒளிவழி கூறியது.
அந்தப் பெண் விழுந்த இடத்தில், சமயச் சடங்குகள் செய்த பின்னர் இந்தியாவில் சடங்குகளைப் பூர்த்தி செய்ய அங்கிருந்து சிறிது மண்ணை அந்தக் குடும்பத்தினர் எடுத்துச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. அவரும் அவரது குடும்பத்தினரும் மலேசியாவுக்கு சுற்றுலாவாக வந்த இடத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்தது.
தற்போது அந்தக் குடும்பம் விஜயலட்சுமியை இழந்து இந்தியா திரும்புகிறது.