மலேசிய கூட்டு பாலியல் நடவடிக்கையின் கும்பல் தலைவரான சிங்கப்பூரர் கைது.

மலேசியாவில் கூட்டு பாலியல் நிகழ்வுகளை, அதன் 147,000 சந்தாதாரர்கள் அல்லது ‘வாடிக்கையாளர்களுக்காக’ ஏற்பாடு செய்து வந்த கும்பல் ஒன்றின் தலைவர், இவ்வாரம் காவல்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனைகளில் சிக்கினார்.

சிங்கப்பூரரான அவர், மேலும் 35 பேருடன் கைது செய்யப்பட்டதாக ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்த செய்தியாளர் கூட்டத்தின்போது காவல்துறைத் துணை ஆணையர் ஃபடில் மர்சுஸ் தெரிவித்தார்.

இணையம்வழி இயங்கி வந்ததாகக் கூறப்படும் இக்கும்பல், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கூட்டுரிமைக் கட்டடங்களில் கூட்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் காதலர்களை மாற்றிக்கொள்ளவும் அதன் வாடிக்கையாளர்களை அனுமதித்தது.

ஒருவர் சந்தாதாரர் ஆவதற்கு 388 ரிங்கிட் (S$118) செலுத்த வேண்டும். அத்துடன் பாலியல் தொடர்பான நிகழ்வுக்குச் செல்லும்போதெல்லாம் ஆளுக்கு 400 ரிங்கிட் செலுத்த வேண்டும்.

கைதான சிங்கப்பூரருடன் மலேசியர் ஒருவரும் குழுத் தலைவராகச் செயல்பட்டார் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கும்பல் 2024ஆம் ஆண்டின் முற்பாதியிலிருந்து இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

கண்காணிப்பின் வழியாகவும் துப்புகள் கிடைத்ததன் மூலமாகவும் காவல்துறை ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் மோண்ட் கியாராவில் உள்ள ஒரு கூட்டுரிமை வீட்டில் முதல் சோதனையை நடத்தியது.

அங்கு 18 ஆண்களும் 16 பெண்களும் சிக்கியதாகக் கூறப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள், அரசாங்க ஊழியர்கள், பிரஞ்சு குடியுரிமை உள்ள ஒருவர், சீன நாட்டவர் ஒருவர், நைஜீரியர் ஒருவர் உள்பட பலர் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிக்கியவர்களில் ஆக இளையவர் 19 வயது பெண் என்றும் கூட்டு பாலியல் நிகழ்வுகளில் அவர் இணை ஏற்பாட்டாளராக இருக்க கும்பல் அவரை வேலையில் சேர்த்தது என்றும் அறியப்படுகிறது.

பாலியல் நடவடிக்கை தொடர்பான பொருள்கள், கைப்பேசிகள், கணினிகள், ரொக்கம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஒருவரைச் சந்தாதாரராக ஏற்றுக்கொள்ள முதலில் காணொளிவழி பேட்டி ஒன்றை கும்பல் நடத்தும் என்று கூறப்படுகிறது.

பொதுமக்களின் சந்தேகத்தை எழுப்பாத விதமாக கும்பல் அதன் நடவடிக்கைகளை வெவ்வேறு கூட்டுரிமைக் கட்டடங்களில் நடத்தி வந்தது.

இந்த நிகழ்வுகளைத் தவிர, கும்பல் அதன் இணையத்தளத்தில் ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் பதிவேற்றம் செய்ததாகவும் அறியப்படுகிறது.

இதுகுறித்து மேலும் விசாரிக்க உள்ளதாகவும் இதுபோன்ற வேறு சில தளங்கள் இத்தகைய சேவைகளை வழங்கி வருகின்றன என்றும் குறிப்பிட்டார் துணை ஆணையர் ஃபடில்.

இவ்வாறு ஈடுபடுவோரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்வோம் என்றும் அவர் சூளுரைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.