அச்சத்தில் காவல்துறையை உதவிக்கு அழைத்த மாட்டிக்கொண்ட திருடர்கள்.
திருடச் சென்ற இடத்தில் மாட்டிக்கொண்டதால் நையப் புடைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் திருடர்களே காவல்துறையைத் தொடர்புகொண்டு, உதவிகோரியது வியப்பளித்துள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், பிகானெரில் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) பின்னிரவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அவ்விரு திருடர்களும் இரவு 2 மணியளவில் கோலாயத் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குத் திருடச் சென்றனர். அவ்வீட்டின் உரிமையாளரான மதன் என்பவர், அவ்வேளையில் அருகிலிருந்த தம் சகோதரரின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
வீடு திரும்பிய மதன், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். இதனால் அதிர்ச்சியுற்ற அவர், தம் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளதை அறிந்தார்.
உடனடியாக வீட்டின் கதவை வெளியிலிருந்து மூடிய அவர், அக்கம்பக்கத்தில் உள்ளோருக்குத் தகவல் தெரிவித்தார்.
வீட்டின்முன் கூட்டம் திரண்டுவிட்டதை அறிந்த திருடர்கள், அறைச் சன்னலை உடைத்துத் தப்பிக்க முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சி பயன் தரவில்லை.
இதனையடுத்து, தாங்கள் இருந்த அறையை உட்பக்கமாகத் தாழிட்ட அவர்கள், உதவிகோரி காவல்துறைக்கு அழைப்புவிடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மதனின் வீட்டிற்குச் சென்றனர். காவல்துறையினர் வந்துவிட்டதை உறுதிப்படுத்திய பின்னரே, திருடர்கள் இருவரும் அறையைவிட்டு வெளியே வந்தனர்.
பின்னர், இந்திரராஜ், சஜ்ஜன் குமார் என்ற அவ்விரு திருடர்களையும் காவல்துறை கைதுசெய்து, விசாரித்து வருகிறது.