ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆந்திராவின் விஜயவாடா நகரமே தத்தளித்து வருகிறது. அங்கிருக்கும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், செய்வதறியாது தவித்த மக்கள், கழுத்தளவு நீரில் நடந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.

திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக் கொண்டன. பெட்ரோல் நிலையங்களையும் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

குறிப்பாக என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள வெங்கடய்யா பால்யம் கிராமத்தில் தரைப்பாலம் மூழ்கியதால், கனமான கயிற்றைக் கட்டி மக்கள் ஆற்றைக் கடந்தனர். அப்போது ஒருவர் ஒரு கையால் கயிற்றைப் பிடித்தபடி சென்றதுபோது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஆற்றின் நடுவில் உள்ள மரத்தின் கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என கதறிய அவரை மக்கள் பத்திரமாக மீட்டனர்.

விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரப்பர் படகில் சென்று ஆய்வு செய்தார்.

ஆந்திராவைப் போன்று, தெலங்கானாவிலும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஹைதராபாதில் ஹுசைன் சாகர் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வாரங்கல் மாவட்டத்தின் ஷிவ்நகர் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

மேலும் தெலங்கானாவின் கம்மம், சூர்யாபேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளிலும் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழை, வெள்ளம் காரணமாக பல இடங்களில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் 100 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு, சார்மினார், கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டப்பள்ளி மற்றும் ராயனபாடு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

இதுவரை இந்த வெள்ளத்தால் ஆந்திராவில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கே மக்களை வெள்ளத்திலிருந்து மீட்டு வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.