ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரிக்கும் தமிழரசின் மத்திய குழுவின் தீர்மானத்தை ஒற்றுமையாக நடைமுறைப்படுத்துவோம்! – யாழில் மாவை இன்று அதிரடி அறிவிப்பு.
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுகவீனம் காரணமாக நேற்றைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ள முடியவில்லை.
ஆனாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு நேற்று எடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கல், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை, எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் ஆகிய மூன்று தீர்மானங்களையும் ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம்.” – என்றார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது என்று வெளியாகியுள்ள தகவல், கட்சியின் முடிவல்ல என்றும், இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு என்றும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.