மீளவும் ராஜபக்க்ஷ குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கவே கூடாது! – பரப்புரைக் கூட்டத்தில் அநுர வேண்டுகோள்.
“ராஜபக்ஷவினர் குடும்ப ஆட்சியையே முன்னெடுத்தனர். அந்தக் குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ரிக்கிலகஸ்கட பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தார். தற்போது அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
79 வயதான மஹிந்த ராஜபக்ஷ தமது மகனுக்காக மேடையேறுகின்றார். கடும் கஷ்டத்துடன் அவர் மேடைகளில் ஏறுகின்றார். நடக்கக் கஷ்டப்படுகின்றார்.
இவ்வளவு கஷ்டப்பட்டு மேடைகளில் ஏறுவதற்கான காரணம் பொதுமக்களின் நலன் கருதியா? இல்லை. தமது பிள்ளையின் வெற்றிக்காகவே. எனவே, ராஜபக்ஷ குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது.” – என்றார்.