60க்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை; ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலியர்.
ஆஸ்திரேலியாவிலும் இத்தாலியிலும் தமது பராமரிப்பில் இருந்த அறுபதுக்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல்களைச் செய்ததை ஆஸ்திரேலியர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் கிரிஃபித் மீதான 307 குற்றச்சாட்டுகளை நீதிபதி ஆண்டனி ராஃப்டர் இரண்டு மணி நேரத்துக்கு மேல் வாசித்தார். அங்கு பாதிக்கப்பட்ட சிறுமிகளும் அவர்களது குடும்பத்தினரும் திரண்டிருந்தனர் என்று ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசி கூறியது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத சிறுமிகள் தொடர்பான மோசமான பாலியல் செயல்களில் ஈடுபட்ட அந்த 46 வயது சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுகள் 2023ஆம் ஆண்டில் பொதுமக்களிடையே அறிவிக்கப்பட்டது.
முதல் முதலில் 2022ஆம் ஆண்டில் சிறார்களை துன்புறுத்தும் உள்ளடக்கங்களை வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பிறகு 91 குழந்தைகளுக்கு எதிராக அவர் மீது 1,623 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
இருந்தாலும் சில குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. அதன் பிறகு செப்டம்பர் 2ஆம் தேதி அறுபது சிறார் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்.
2003க்கும் 2022க்கும் இடையே ஆஸ்திரேலியாவில் உள்ள 12 வெவ்வேறு இடங்களிலும் இத்தாலியில் உள்ள பீசாவிலும் அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிரிஃபித் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பின்னர் ஒரு தேதியில் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.