மாகாண ரீதியிலான விளையாட்டுப்போட்டியில் முதலிடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு.
கடந்த வாரம் வடக்கு மாகாண பாடசாலை ரீதியான விளையாட்டு போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாடரங்கில் நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்டம் மூன்றாவது முறையாகவும் முதலாவது இடத்தைப் பெற்றுள்ள நிலையில்,
போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது நேற்றைய தினம் (02.09)திங்கள்,காலை,9.00 மணியளவில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்கள் மன்னார் சுற்றுவட்டத்திலிருந்து பாண்ட் வாத்தியத்துடன் வலயக் கல்விப் பணிமனைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் டி.ஜி. தேவராஜா உரையாற்றுகையில்,
“மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேயளவு விளையாட்டும் முக்கியம், இன்றைய இளைஞர் சமுதாயத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறு விளையாட்டுக்களில் பங்குபற்றுகிற மாணவர்கள், முறையான உடற்பயிற்சியினைப் பெற்றுக்கொள்வதால், உடல் உறுதி மற்றும் மனவுறுதி காரணமாக தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடமாட்டார்கள். மற்றும் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களிடம் நல்லொழுக்கமும் காணப்படும்” என்றார்.
அத்தோடு மூன்றாவது தடவையாகவும் மன்னார் வலயத்தை வெற்றி பெறச்செய்து மன்னார் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் நன்றி கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி. ஞானராஜ், “மாகாண ரீதியான விளையாட்டுப் போட்டியில் வடக்கு மாகாணத்தின் பதின்மூன்று கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் போட்டியிட்டன. இதில் 2018 ஆம் ஆண்டு மன்னார் கல்வி வலயம் முதல் தடைவையாக முதலாமிடத்தையும், அதன்பின் 2023 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக முதலாமிடத்தையும், தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டும் முதலாமிடத்தைப் பெற்று வெற்றியைத் தக்கவைத்துள்ளது. எனவே நாம் தொடர்ந்தும் வெற்றிபெற உழைப்போம் என்றார்.”
பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.ஞானராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
வலயக் கல்விப் பணிப்பாளர். டி.ஜி. தேவராஜ்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் எ. பிறேம்தாஸ்,கல்வி அபிவிருத்தி நிர்வாகத்தினர், நானாட்டான், மன்னார் கோட்டக்கல்வி அதிகாரிகள்,வலயக் கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த ஏனைய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.