ரெலிகிராம் நிறுவனர் கைது சொல்லும் செய்தி, கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்தா? : சுவிசிலிருந்து சண் தவராஜா
இன்றைய தகவல் யுகத்தில் புலனம் என அழைக்கப்படும் வட்ஸ்அப் போன்ற தகவல் பரிவர்த்தனை வலையமைப்பைப் பாவிக்காத எவரும் இருக்க முடியாது.
சாதாரண கடைக்கோடி மனிதனில் தொடங்கி நாட்டின் அதிபர் வரை இதனைப் பாவித்து வருகின்றனர்.
அறிவு பூர்வமான தகவல்கள் தொடங்கி தேவையற்ற அலட்டல்கள் வரை இதில் பரிமாறப்பட்டு வருகின்றன. சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் மாத்திரமன்றி சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுபவர்கள் கூட இத்தகைய தகவல் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட வலையமைப்புகள் உலகளாவிய அடிப்படையில் செயல்பட்டுவரும் நிலையில் தங்கள் செயலிகளைப் பாவிப்போரின் தகவல்கள் ஒருவருக்கு ஒருவர் பிரத்தியேகமானவற்றை, நிறுவனங்கள் நினைத்தால் கூட பார்த்துவிட முடியாது என்ற அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
அதேவேளை, குற்றவாளிகளும், தீவிரவாதிகளும் கூட இத்தகைய செயலிகளைப் பாவித்து தங்கள் கருமங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் பாவனையாளர்களின் விபரங்கள் தங்களிடம் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும் என அரசாங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசுகள் சட்டத்தின் துணையை நாடி நிற்கின்றன.
இத்தகைய தகவல் பரிவர்த்தனை செயலியான ´ரெலிகிராமின்´ நிறுவனர் பாவல் டுரோவ் ஆகஸ்ட் 24ஆம் திகதி சனிக்கிழமை பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். அஸர்பைஜான் நாட்டில் இருந்து சொந்த விமானம் மூலம் பாரிஸ் – லே புர்கே விமான நிலையம் வந்த வேளை அவர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
புலனத்துக்கு அடுத்ததாக அதிகளவான பாவனையாளர்களைக் கொண்ட ரெலிகிராமின் நிறுவனர் கைது செய்யப்பட்டமை உலகளாவிய அடிப்படையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மாத்திரமன்றி இராஜதந்திரப் போரையும் ஆரம்பித்து வைத்துள்ளது.
மேனாள் சோவியத் ஒன்றியத்தில் சென் பீற்றஸ்பேர்க்கில் பிறந்த டுரோவ் ஐக்கிய அரபு இராச்சியம், பிரான்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் நெவிஸ் ஆகிய நாடுகளில் குடியுரிமையையும் கொண்டுள்ளார்.
அவரது ரெலிகிராம் நிறுவனத்தின் தலைமையகம் டுபாயில் அமைந்துள்ளது. இவரது கைதுக்கான காரணம் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரான்ஸ் அலுவலகமே இவரது கைதுக்கு உத்தரவிட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
அத்தோடு மோசடி, போதைப்பொருள் கடத்தல், இணையவழி மிரட்டல்கள்ர, ஒன்றிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகளில் இவர் விசாரிக்கப்படலாம் எனவும் தெரிய வருகின்றது.
இத்தகைய குற்றங்களை அவரே நேரடியாகப் புரிந்ததாக அல்லாமல், அவரது செயலியைப் பாவிக்கின்ற குற்றவாளிகளைத் தடுப்பதற்கு அவர் முயலவில்லை என்பதே அவர் புரிந்த குற்றமாக(?) கருதப்படுகின்றது.
உலகளாவிய அடிப்படையில் 900 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட ரெலிகிராம் செயலி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ரஸ்யாவில் அதிகம் பாவனையில் உள்ளது. உக்ரைன் போரின் பின்னான காலப்பகுதியில் ரஸ்யா மீதான பரப்புரை யுத்தத்தை மேற்குலகம் தீவிரமாக நடத்திவரும் நிலையில் ரெலிகிராம் செயலியும் பலத்த விமர்சனங்களையும் கண்டனங்களையும் சந்தித்து வருகின்றது. இந்தச் செயலி தடைசெய்ய்யப்பட வேண்டும் என மேற்குலகில் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன.
இந்தச் செயலியைத் தடை செய்வது தொடர்பில் உக்ரைன் அரச தரப்பில் இருந்து 2002ஆம் ஆண்டு முதலே கோரிக்கைகள் எழத் தொடங்கிவிட்டன. உக்ரைன் நாட்டில் உள்ள 72 வீதமான மக்கள் இந்தச் செயலியைப் பாவித்து வருகின்றனர். வெளி நபர்களால் ஊடுருவ முடியாத செய்திப் பரிமாற்றச் சாதனமாக இருப்பதால் ரஸ்யப் படையினரும் கூட இதனையே அதிகம் பாவித்து வருகின்றனர் என்கின்றன தகவல்கள்.
உக்ரைன் போர் ஆரம்பமான காலகட்டத்தின் பின்னர் முதல் தடவையாக ரஸ்யாவுக்குள் படைகளை அனுப்பி ஒரு சிறிய பகுதியை உக்ரைன் படைகள் கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையிலேயே டுரோவின் கைது நிகழ்ந்துள்ளது.
ரஸ்ய நாட்டில் ஊடுருவலுக்கு உக்ரைன் படைகளுக்கு மேற்குலகம் பச்சைக் கொடி காட்டியுள்ள நிலையில் ரெலிகிராம் செயலியைத் தடை செய்வது அல்லது அழுத்துங்களைப் பிரயோகித்து டுரோவிடம் இருந்து செயலியின் ஊடாகப் பரிமாறப்பட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்வது இந்தக் கைதின் நோக்கமாக இருக்கக் கூடும் என நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.
மறுபுறம், ரஸ்ய அதிபர் புட்டினுக்கும் ரெலிகிராம் அதிபர் டுரோவ்வுக்கும் இடையில் தனிப்பட்ட நட்பு உள்ளது, ரெலிகிராம் செயலி ரஸ்ய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்
செயல்படுகின்றது என்ற வதந்திகளும் உலா வருகின்றன. ரஸ்ய அரசாங்கத்துடன் ஏற்பட்ட உரசல் காரணமாக ரஸ்யாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசித்துவரும் டுரோவ் இத்தகைய வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
அவரது கைது நடைபெற்ற 24ஆம் திகதி அவர் அஸர்பைஜான் நாட்டில் இருந்து வருகை தந்திருந்தார். அவர் அந்த நாட்டில் தங்கியிருந்த வேளையில் ரஸ்ய அதிபர் விளாடிமிர்
புட்டின் அரசுமுறைப் பயணமாக அஸர்பைஜான் சென்றிருந்தார். அங்கே இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்கள் என்றொரு வதந்தி ஒருசில ஊடகங்களில் கசிய விடப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என ரஸ்ய அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுரோவ் அவர்கள் கைது செய்யப்பட்ட உடனேயே அவரது கைதுக்கான கண்டனத்தைத் தெரிவித்திருந்த ரஸ்யா அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன், டுரோவின் கைது நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம். அதில் அரசியல் நோக்கம் எதுவும் அதில் இல்லை எனக் கூறியிருந்தார். அவரது கூற்றே ஒருவகை அரசியல்தான் என்பது நோக்கத்தக்கது. உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு எதிராகப் போரிடப் பிரஞ்சுப் படைகளை அனுப்ப வேண்டும் என ஒருசில மாதங்களுக்கு முன்னர் மக்ரோன் கருத்துத் தெரிவித்திருந்தமை தெரிந்ததே.
ரஸ்யாவின் எதிர்வினையும் மக்ரோனின் பதிலும் இந்த விவகாரத்தில் மறைமுகமாக ஏதோ பாரிய பிரச்சனை உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, இணைய நிறுவனங்களை நடத்தும் பலரும் டுரோவின் கைதைக் கண்டித்துள்ளனர். இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான சவால் என அவர்கள் கூறி வருகின்றனர். ஒரு பொதுவான செயலியைப் பாவிப்பவர்கள் அதனைத் தவறான வழியில் பயன்படுத்தினால் அங்கே குற்றமிழைப்பவர் பயனாளரா அல்லது நிறுவனத்தின் உரிமையாளரா என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகின்றனர்.
உக்ரைன் போரின் போக்கு மூன்றாம் உலகப் போருக்கு வித்திடக் கூடும் எனப் பல அறிஞர்களும் எதிர்வு கூறியுள்ள நிலையில் தற்போதைய நிகழ்வுகள் உக்ரைன் போர்
மேலும் விரிவடையும் பாதையிலேயே செல்வதை அவதானிக்க முடிகின்றது. உக்ரைன் சார்பில் போரை நடத்திவரும் நேட்டோ தனது நடவடிக்கைகளில் ஒன்றாக ரெலிகிராம் செயலியைத் தடைசெய்ய முடிவு செய்துவிட்டது என்பதன் வெளிப்பாடே டுரோவின் கைது.
2014இல் ரஸ்யாவில் இதே போன்றதொரு அனுபவத்தைப் பெற்றார் டுரோவ். விகே என்ற பெயரில் அவர் அறிமுகம் செய்திருந்த ஒரு தகவல் பரிவர்த்தனைச் செயலி தொடர்பான இரகசியங்களை தங்களிடம் தருமாறு அப்போது ரஸ்ய உளவுத்துறை அவரை நிர்ப்பந்தித்தது. அதற்கு உடன்படாத நிலையில் நிறுவனத்தின் பங்குகளை விற்றுவிட்டு அவர் நாட்டைவிட்டு வெளியேறி துபாய் சென்றார். 10 வருடங்களின் பின்னர் மீண்டும் அதேபோன்றதொரு நிலைக்கு டுரோவ் வந்திருக்கிறார். தற்போதைய நிலைமையை அவர் எவ்வாறு கையாளப் போகின்றார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விடயம்.