கொல்லப்பட்ட பெண் மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது
அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவர் பணியாற்றி வந்த கோல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரை இந்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைதுசெய்துள்ளது.
பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டது மிகப் பெரிய விவகாரமாக உருவெடுத்ததை அடுத்து, அம்மருத்துவக் கல்லூரியிலிருந்து விலகினார் சந்தீப் கோஷ்.
இந்நிலையில், நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 2) சிபிஐ அவரைக் கைதுசெய்தது.
மேலும், அவருடைய உதவியாளர் ஒருவரும் மருத்துவமனைக்குத் தேவையான பொருள்களை விநியோகம் செய்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் 31 வயதுப் பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை அடுத்து, அவ்வழக்கில் நீதி கேட்டு வலியுறுத்தியும் பணியிடங்களில் பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு கோரியும் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு முழுவதும் போராட்டம்
இதனிடையே, கோல்கத்தா மாநகரக் காவல்துறை ஆணையர் வினீத் கோயல் பதவி விலகவேண்டும் எனக் கோரி, பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த இளம் மருத்துவர்கள் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 2) காவல்துறை தலைமையகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
ஆயினும், அவர்களை மேலும் செல்லவிடாமல் காவல்துறை பி.பி. கங்குலி தெருவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆயினும், அவர்கள் கலைந்துசெல்லாமல் இரவு முழுவதையும் அங்கேயே கழித்தனர். அவர்களுடன் பொதுமக்களில் பலரும் இணைந்தனர்.
இதனையடுத்து, அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டன.
“இது எங்களது திட்டமில்லை. கோல்கத்தா காவல்துறையினர் இவ்வளவு பயந்தவர்கள் என எங்களுக்குத் தெரியாது. எங்களைச் சுற்றி ஒன்பது அடி உயரத்திற்குத் தடுப்புகளை அமைத்துள்ளனர். காவல்துறை தலைமையகத்திற்குச் சென்று, ஆணையரைச் சந்திக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். அதுவரை இங்கேயே அமர்ந்திருப்போம்,” என அங்கிருந்த இளம் மருத்துவர்களில் ஒருவர் சொன்னதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
மருத்துவர்கள் உட்பட அனைவருக்கும் நீதியும் பாதுகாப்பும் வேண்டும் என அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.