மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்த பிரெஞ்சு கணவர் மீது குற்றச்சாட்டு

மனைவியின் உணவு, பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் மற்றவர்களையும் வீட்டுக்கு அழைத்து அவர்கள் தமது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததைக் காணொளி எடுத்ததாக பிரெஞ்சு ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடுமை ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பற்றி தெரியவந்தபோது, டோமினிக் பெலிகோட் எனும் அந்த ஆடவருடன் பாதிக்கப்பட்ட அப்பெண் திருமணப் பந்தத்தில் இணைந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.

பெலிகோட் எடுத்த படங்கள், காணொளிகள், அனுப்பிய தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படும் 51 சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பல ஆண்டுகளாக முடி கொட்டும் பிரச்சினை இருந்து வருவதாகவும் அவர் உடல் எடை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, ஞாபக மறதியாலும் அவர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவரின் செயலால் அவருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கணவரின் செயல் வெளிச்சத்துக்கு வந்ததும் அவரை அப்பெண் மணமுறிவு செய்துகொண்டார்.

அப்பெண்ணுக்குத் தற்போது 70 வயதுக்கும் மேலாகிவிட்டது.

அவரது கணவர் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை 71 வயது பெலிகோட் எதிர்க்கப்போவதில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.

தங்கள் பாவடைகளுக்குள் பெலிகோட் படமெடுக்க முயன்றதாக 2020ஆம் ஆண்டில் மூன்று பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், இரண்டு கேமராக்கள், இதர மின்னணுவியல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதையடுத்து, அவர் தமது மனைவிக்கு இழைத்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பெலிகோட்டுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.