போப் இந்தோனீசியா சென்றடைந்தார்
கத்தோலிக்க சமய குருவான போப்பாண்டவர் பிரான்சிஸ், தமது ஆசிய பசிபிக் வட்டாரப் பயணத்தின் முதல் அங்கமாக செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 3) இந்தோனீசியா சென்றடைந்தார்.
பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட இந்தோனீசியாவில் தொடங்கி அவர் நான்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார். இதுவே 87 வயது போப் பிரான்சிஸ் மேற்கொள்ளவிருக்கும் ஆக நீண்டகால, தொலைதூரப் பயணமாகும்.
அவரின் இப்பயணம், சமயங்களுக்கு இடையிலான உறவுகளைக் கருத்தில்கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தோனீசியாவில் மூன்று நாள்கள் இருக்கவுள்ள போப் பிரான்சிஸ், அதற்குப் பிறகு பாப்புவா நியூ கினி, கிழக்கு தீமோர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் செல்வார்.
இந்தோனீசிய மக்கள்தொகையில் மூன்று விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர்கள். அந்நாட்டில் சுமார் எட்டு மில்லியன் கத்தோலிக்கர்கள் இருக்கின்றனர்.
அதேவேளை, 87 விழுக்காட்டு இந்தோனீசியர்கள் முஸ்லிம்கள்.
எனினும், அந்நாட்டில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆறு சமயங்கள் / சமயப் பிரிவுகளில் கத்தோலிக்க சமயமும் அடங்கும். இஸ்லாமிய சமயத்தைத் தவிர புரெட்டெஸ்டன்ட், பெளத்த, இந்து, கன்ஃபியூசியன் ஆகிய சமயங்கள் / சமயப் பிரிவுகள் இந்தோனீசியாவில் அங்கீகரிக்கப்பட்டவை.
போப் பிரான்சிஸ், இந்தோனீசியாவில் அதிபர் ஜோக்கோ விடோடோ உள்ளிட்டோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.