யாழ். குடாநாட்டு இளம் பெண்கள் 11 பேருக்கு ‘கொரோனா’ தொற்று – அதிர்ச்சியில் குடும்பத்தினர்
கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம் பெண்களும் அடங்குகின்றனர் என்று யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி அறிவித்துள்ளது.
குறித்த பெண்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் புங்குடுதீவில் உள்ள வீட்டுக்கு விடுமுறையில் வந்தபோது யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி மேலும் தெரிவித்துள்ளது.
ஏனைய 10 பேருக்கும் மினுவாங்கொடையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலால் குறித்த பெண்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் நேற்று மட்டும் 729 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்றே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் மொத்தமாக 831 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 252ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 266 பேர் குணமடைந்துள்ளனர். 973 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.