விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க்கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு நேற்று முடிவு செய்துள்ளது.
பல விவசாய சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அமைய, விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கான சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மலையக பெருந்தோட்ட சமூகத்தை ஒரு பரந்த சமூக பொருளாதார கட்டமைப்பிற்குள் முழுமையாக இணைப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இந்த சாசனம் சுட்டிக்காட்டுவதாகவும், இதன் மூலம் பெருந்தோட்ட சமூகம் தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணவும் இலங்கையில் ஒரு நீதியான சமூகத்தை கட்டியெழுப்பவும் முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி அறிஞர் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1, 2025 முதல் அரச சேவையாளர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க ஜனாதிபதி நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைக்கிறது.
இந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க திறைசேரி அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நிதியமைச்சின் ஊடாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தொழிலாளர் தேசிய குறைந்தபட்ச ஊதிய (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.