ஜனாதிபதி தேர்தலுக்கு முன் சஜித் – ரணில் இணைவு இல்லை… வெற்றி பெறும் எமக்கு ஏன் ஆதரவு? முஜிபுர் கேட்கிறார்!
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் அரசியல் ரீதியாக இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என SJB நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (03) தெரிவித்துள்ளார்.
“SJBக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அரசியல் ஒற்றுமை ஏற்படும் என சிலர் கூறுகின்றனர். இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. எங்கள் வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் எங்களுக்கு இதுபோன்ற இணைவு தேவையில்லை” என முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் நந்தன குணதிலக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவதன் அவசியத்தை வலியுறுத்தினார். சக்தி வாய்ந்த தலைவரை உருவாக்குவதற்கு இவை இரண்டும் ஒன்றிணைவதே பிரதான தேவை எனவும், SJBயின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையின் விருப்பமே அதுவாகும் எனவும் தலதா அத்துகோரள வெளியேறும் முன் கூறியதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரதான கட்சிகளின் கூட்டணிக்கான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும், SJBயுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அவர் அந்த அழைப்பை நிராகரித்ததாகவும் நேற்று தெரியவந்துள்ளது.