வாகன விபத்து : மலேசியாவிலிருந்து சென்னை திரும்பிய இளையர் உட்பட 4 பேர் பலி.
சென்னை அருகே நேற்று காலை (செப்டம்பர் 4) நிகழ்ந்த விபத்தில் நான்கு இளையர்கள் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் கோவளம் பகுதியில் உள்ள செம்மஞ்சேரி குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே அந்த விபத்து நிகழ்ந்தது.
முகம்மது ஆஷிக், 22, அஸ்ரப் முகமது, 22, ஆதில் முகமது 22, சுல்தான், 23ஆகிய நான்குபேரும் தலை மற்றும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இவர்களில் முகம்மது ஆஷிக் இன்று அதிகாலை 1.30 மணியளவில்தான் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார்.
அவரை வரவேற்று அழைத்துச் செல்ல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த அவரது நண்பர்கள் மூவரும் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர்.
முகம்மது ஆஷிக் வெளியே வந்ததும் அவரது உடைமைகளை காரில் ஏற்றிக் கொண்டு நேராக வீட்டிற்குச் செல்லாமல் வண்டலூர் வழியாக கேளம்பாக்கம், மாமல்லபுரம் சென்றனர். அங்கு சிறிது நேரம் தங்கிவிட்டு, விடியற்காலை 4 மணியளவில் நால்வரும் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.
சென்னை பார்டர் தோட்டம் பகுதியில் முகம்மது ஆஷிக்கின் வீடு உள்ளது.
விடியற்காலை 4.40 மணியளவில் வேகமாகச் சென்ற அவர்களின் கார் கோவளம் அருகே சாலைத்தடுப்பில் மோதி, பின்னர் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியின் மீது மோதியது. கார் கடுமையாகச் சேதமடைந்து நொறுங்கியது.
நசுங்கிக் கிடந்த காரை இயந்திரங்கள் மூலம் மீட்டு நான்கு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் ரங்கநாதன், 55, என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முகம்மது ஆஷிக்கின் தந்தை சுல்தான் மலேசியாவில் வேலை செய்கிறார். அவருடன் சிறிது நாள்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பியதும் விபத்தில் சிக்கி அந்த இளையர் உயிரிழந்தது அவரது உறவினர்களை பெரும் சோகத்தில் மூழ்கடித்தது.