அமெரிக்க உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 14 வயது மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது சக மாணவர்கள் இருவரும் ஆசிரியர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.

விண்டெர் நகரில் உள்ள அபலாச்சி உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை (செப்டம்பர் 4) நடந்த இச்சம்பவத்தில் மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

புதிய கல்வி ஆண்டு தொடங்கிய சில நாள்களில் நடைபெற்ற இச்சம்பவம் அமெரிக்காவை உலுக்கியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் மாணவரை சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு (2023), பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்போவதாக இணையம்வழி மிரட்டல் விடுத்ததற்காக அந்த இளையரை அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

கோல்ட் கிரே எனும் அந்த 14 வயது இளையர், அதே பள்ளியில் பயில்வதாகக் கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பிறகு பெரியவர்களைப்போன்றே அவர் விசாரிக்கப்படுவார் என்று ஜார்ஜியா புலனாய்வுப் பிரிவு இயக்குநர் கிறிஸ் ஹோசே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க நேரப்படி புதன்கிழமை காலை 10.20 மணியளவில் துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

பள்ளி அதிகாரி ஒருவர் துப்பாக்கிக்காரரை எதிர்கொண்டு உடனடியாக மடக்கிப் பிடித்ததாகவும் அந்த இளையர் சரணடைந்ததாகவும் கூறப்பட்டது.

தாக்குதலுக்கான நோக்கத்தை விசாரணையில் அவர் கூறினாரா என்பது குறித்துத் தகவல் இல்லை. இளையர் பயன்படுத்திய துப்பாக்கி எந்த வகையைச் சேர்ந்தது என்பதையும் அதிகாரிகள் கூறவில்லை.

புதன்கிழமை பின்னேரம் பூங்கா ஒன்றில் குழுமிய விண்டெர் நகர மக்கள் உயிரிழந்தோர்க்காக அஞ்சலி வழிபாடு நடத்தினர்.

இதற்கிடையே, அதிபர் ஜோ பைடனுக்கு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.

தாமும் தமது மனைவியும் துப்பாக்கி வன்முறையால் உயிரிழந்தோர்க்காக வருந்துவதாக அதிபர் பைடன் கூறியுள்ளார்.

மேலும், துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பான சட்டத்தை இயற்றுவதில் ஜனநாயகக் கட்சியினரோடு இணைந்து செயலாற்ற குடியரசுக் கட்சியினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

துணை அதிபரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்துள்ளார். இத்தகைய துப்பாக்கி வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று தமது பிரசார உரையிலும் அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.