ஆதரவற்றவர்களுக்கு தாயான புனித அன்னை திரேசா
புனித அன்னை திரேசாவின் 27 வது நினைவு தினம் இன்று.
ஐரோப்பாவின் அல்பேனியாவில் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ல் பிறந்தவர் அன்னை தெரசா.
அனைவரையும் பாசக்கரம் நீட்டி அரவணைக்கும் பண்பு கொண்டவர். தனது பிறப்பிடத்தை விட்டு புலம்பெயர்ந்து கொல்கொத்தா நகரில் ஏழைகளுக்காக தனது வாழ்நாளில் தொண்டு செய்து மனமகிழ்ந்தவர்.
இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட தாயால் அன்பு பாராட்டி வளர்க்கப்பட்டார்.
அப்போது கிறிஸ்தவ மறைப் பணியாளர்களாலும் அவர்களின் சேவையாலும் பெரிதும் ஈர்க்கப்பட்ட அவர். தனது 12வது வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார்.
18வது வயதில் முழு நேர சமூக சேவையில் ஈடுபட முடிவு செய்து லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறை பணியாளராக சேர்ந்து கொண்டார். இந்த சகோதரிகள் இந்தியாவின் மேற்கு வங்கத்திற்கு சென்று பின்னர் நாடு திரும்பினர்.
அப்போது இந்தியாவில் இருக்கும் ஏழ்மையை அறிந்து அவர்களுக்காக உதவ தெரசா முன்வந்தார். அதன்படி, 1928ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் திகதி அயர்லாந்தின் சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார்.
1929ல் இந்தியாவின் மேற்குவங்கத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார். அங்குள்ள கத்தோலிக்க திருச்சபையில் சேரும் போது விதிமுறைகளின் படி தன் பெயரை ’தெரசா’ என்று மாற்றிக் கொண்டார். கொல்கத்தாவில் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்களின் நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பசியில் வாடிய குழந்தைகள் உள்ளிட்டவற்றைக் கண்டு வருத்தமடைந்தார்.
அவர்களுக்கு சேவையாற்ற ஆரம்பித்து, 1950ல் ’பிறர் அன்பின் பணியாளர்’ என்ற சபையைத் தொடங்கினார். அதன்மூலம் பசியால் வாடும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு உதவிகள் செய்தார். முதியோருக்காக ’நிர்மல் ஹ்ருதய்’ என்ற இல்லத்தையும், நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தர ’மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’ என்ற அறக்கட்டளையையும் தொடங்கினார்.
1955ல் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்ற, குப்பையில் வீசிய குழந்தைகளுக்கு அடைக்கலம் தர ’சிசுபவன்’ இல்லத்தை தொடங்கினார். ’காந்தி பிரேம் நிவாஸ்’ என்ற பெயரில் தொழுநோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார்.
அவரது தியாக சேவைக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ,ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்.1979ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.; உடல்நலக்குறைவு காரணமாக 1997ல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். அதே ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி அன்னை காலமானார். அன்னையின் மறைவிற்குப் பின்னர் திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவரை முத்திப்பேறு பெற்ற அருளாளராக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களை ஏற்றுக் கொண்டுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் செப்டம்பர் 4ஆம் திகதி வத்திக்கான் புனித பேதுரு பெசிலிக்கா பேராலயத்தில் இடம்பெற்ற விசேட திருவழிபாட்டில் அன்னை தெரேசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.
இன்று அன்னை மறைந்த 27 வது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் வேளையில் அவர் ஆற்றிய சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர் இறைசந்நிதியில் முத்திப் பேறுபெற்ற அன்னையாக இன்றும் நம்மை வறுமையிலிருந்து காக்க வேண்டுவாள் என்று நம்புவோமாக
R