பச்சிளங் குழந்தையுடன் சாலையில் பறந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.
பிறந்து ஏழு நாள்களே ஆன பச்சிளங் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதற்காக, அக்குழந்தை திருச்சியில் இருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துவரப்பட்டது.
திருச்சி மாவட்டம் நவகுடியைச் சேர்ந்த திருமுருகன், துர்காதேவி தம்பதியர்க்கு கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
எனினும், குழந்தையின் இதயத்தில் பிரச்சினை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அறுவை சிகிச்சை செய்தால்தான் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில், திருச்சி மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இல்லை.
எனவே, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம், குழந்தையும் பெற்றோரும் சிறப்புத் தாதி ஒருவரும் கோவைக்கு புதன்கிழமை பிற்பகல் புறப்பட்டனர்.
சுமார் 2.45 மணி நேரத்துக்குள் ஆம்புலன்ஸ் கோவை சென்றடைந்தது.
ஓட்டுநர் மிக நேர்த்தியாகச் செயல்பட்டதற்கு, எதிர்பார்த்ததுக்கும் முன்பாகவே ஆம்புலன்ஸ் கோவை வந்தடைந்ததாக குழந்தையின் பெற்றோரும் மற்றவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, காவல்துறையும் பல முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது.
“வழக்கமாக திருச்சி, கோவை இடையே பயண தூரம் மூன்றரை மணி நேரமாக இருக்கும். ஆனால், காவல்துறை ஒத்துழைப்புடன் வாகனத்தை மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடிந்தது.
“அதனால்தான் 2.45 மணி நேரத்துக்குள் கோவை சென்றடைய முடிந்தது,” என்றார் ஓட்டுநர் அஸ்வின்.