காதலனால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை ரெபெக்கா மரணம்.
உகாண்டாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனை ரெபெக்கா செப்ட்டெகே (Rebecca Cheptegei) அவரது காதலனால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் மாண்டுபோனார்.
கென்யாவில் அந்தச் சம்பவம் நடந்ததாக உகாண்டா ஒலிம்பிக் குழுத் தலைவர் தெரிவித்தார்.
33 வயது ரெபெக்காவின் உடலில் 80 விழுக்காட்டுத் தீக்காயங்கள் ஏற்பட்டன.
நேற்று முன்தினம் (4 செப்டம்பர் 2024) இரவு அவரின் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்தன.
டிக்சன் எண்டிமா மரங்காச் (Dickson Ndiema Marangach) என்ற ஆடவர் ரெபெக்காவைப் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை (1 செப்டம்பர் 2024) ரெபெக்காவின் வீட்டில் தாக்குதல் நடைபெற்றது.
டிக்சன் அவரின் காதலன் என்று கூறப்பட்டது.
சம்பவத்தை ரெபெக்காவின் மகள்களில் ஒருவர் நேரில் கண்டதாக ஊடகங்கள் கூறின.
அம்மாவைக் காப்பாற்ற ஓடியதாகவும் ஆனால் ஆடவர் தம்மை உதைத்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
ரெபெக்காவுக்கும் டிக்சனுக்கும் இடையே நிலத் தகராறு இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
ரெபெக்கா ஒருசில வாரங்களுக்கு முன்புதான் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார்.
நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் அவர் 44ஆவது இடத்தில் வந்தார்.