இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில்: மோடி
இந்தியாவிற்குள் சிங்கப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளை உருவாக்க இலக்கு …….
இந்தியா அதன் முதல் திருவள்ளுவர் கலாசார மையத்தை விரைவில் சிங்கப்பூரில் அமைக்க இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று, இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ள அவர், வியாழக்கிழமை (செப்டம்பர் 5), பிரதமர் வோங்கைச் சந்தித்துப் பேசியபோது இதைத் தெரிவித்தார்.
உலகிற்கு வழிகாட்டும் சிந்தனைகளை மிகத் தொன்மையான மொழியான தமிழில் வழங்கியவர் திருவள்ளுவர் என்று மோடி குறிப்பிட்டார்.
ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் கருத்துகள் இக்காலத்துக்கும் பொருத்தமாக இருப்பதாக அவர் கூறினார்.
“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு” என்ற குறளை எடுத்துக்கூறிய அவர், நீதியையும் அறத்தையும் விரும்பி, பிறர்க்கும் பயன்படுவோரின் பண்பை உலகத்தோர் சிறப்பித்துப் பேசுவர் என்ற அக்குறளின் பொருளையும் விவரித்தார்.
சிங்கப்பூரில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் திருவள்ளுவரின் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றிருப்பர் என்றும் அவர்கள் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தப் பங்களிப்பர் என்றும் தாம் நம்புவதாக இந்தியப் பிரதமர் கூறினார்.
முன்னதாக, தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு இந்தியப் பிரதமர் உளமார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டார்.
திரு வோங் பிரதமராகப் பதவியேற்றபின், அவரை முதல்முறை சந்திப்பதைக் குறிப்பிட்ட திரு மோடி அவருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
நான்காம் தலைமுறைத் தலைவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் மேலும் விரைவாக வளர்ச்சி காணும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிங்கப்பூர் இந்தியாவின் பங்காளித்துவ நாடு மட்டுமன்று என்று கூறிய பிரதமர் மோடி, ஒவ்வொரு வளரும் நாட்டுக்கும் அது ஊக்களிக்கும் முன்மாதிரி நாடு என்று புகழ்ந்தார்.
இந்தியாவிற்குள் சிங்கப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளை உருவாக்க இலக்கு கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இருதரப்பும் ஒத்துழைப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான வட்டமேசைக் கூட்டம் வருங்காலச் செயல்பாடுகளுக்கான மிகச் சிறந்த செயல்முறையாக விளங்கும் என்றார் மோடி.