போர்க்குற்றவாளிகளை நீதிமன்றம் தண்டிக்கும்! – ஊடகர்களின் கேள்விக்கு அநுர விளக்கம்.

“போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும், இப்போதும்உறுதியாகவுள்ளேன். ஆனால், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம்.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அநுரகுமார அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில், ‘போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

அவரின் இந்தச் செவ்வியை மேற்கொள்காட்டி, ‘இறுதிப்போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?’ என்று ஊடகவியலாளர்கள் வினவினார்கள்.

இதற்குப் பதிலளிக்கும்போதே, “இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன். நீதிமன்றங்கள் அவர்களைத் தண்டிக்கும்.” – என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.