தையிட்டி விகாரைப் பகுதி இரகசியமாக அளவீடு!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெறும் அதேநேரம், யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியை முழுமையாக சுவீகரிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் நில அளவீடு மேற்கொண்டு வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டிக் கிராமத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அண்டிய நிலம் முழுவதையும் சுவீகரிக்க முயற்சிக்கப்பட்டு வருகின்றது. இந்த நில அபகரிப்பின் முதல் அங்கமாக அந்தப் பகுதியை அளவீடு செய்ய நில அளவைத் திணைக்களம் முயன்ற போதெல்லாம் அந்த நிலத்தின் உரிமையாளர்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்த எதிர்ப்பின் காரணமாக மாவட்ட நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீட்டை மேற்கொள்ளாது திரும்பிச் சென்று அறிக்கை சமர்ப்பித்தனர்.
இவற்றின் அடிப்படையில் தற்போது விகாரை அமைந்துள்ள பிரதேசம் மற்றும் விகாரையைச் சூழவுள்ள பகுதியென 6 ஏக்கர் நிலம் நில அளவைத் திணைக்களத்தின் தலைமைப் பணிமனை அதிகாரிகள் கொழும்பில் இருந்து வருகை தந்து அளவீட்டை மேற்கொண்டு அதன் வரை படத்தைத் தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
இவற்றின் அடப்படையில் 6 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதி நிலங்களின் உரிமையாளர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.