செய்வேன் எனச் சொல்லும் சஜித்தைவிட செய்து காட்டிய ரணிலே எம் நாட்டுக்குத் தேவை! – ராமேஷ்வரன் எம்.பி. தெரிவிப்பு.

செய்வேன் எனச் சொல்லும் சஜித் பிரேமதாஸவை விட செய்து காட்டிய ரணில் விக்கிரமசிங்கவே எமது நாட்டுக்குத் தேவை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து பூண்டுலோயா ஹெரோவ் தோட்டப் பகுதியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இ.தொ.கா. பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லமுத்து, பிரதி தேசிய அமைப்பாளர் சசிகுமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பாரதிதாசன், ரஜினிகாந்த், சிவகொழுந்து, செல்வமதன், ரஜீவ்காந்தி, கிளோரியா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:-

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு எமது மக்களுக்காகப் பல சேவைகளை செய்துள்ள ஜனாதிபதி காணி உரிமை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளார். எனவே, ரணில் விக்கிரமசிங்க எதையும் செய்யமாட்டார் என எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் பிரசாரம் போலி என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

ஆறு பேர் அல்ல இரண்டு பேர் இருந்தால்கூட மக்கள் ஆதரவுடன் பேரம் பேசி உரிமைகளையும், அபிவிருத்திகளையும் வென்றெடுக்கும் வல்லமை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது. அன்று முதல் இன்றுவரை இதனை நாம் நிரூபித்து வருகின்றோம்.

தனது தந்தை குடியுரிமை, வாக்குரிமை வழங்கினார் எனக் கூறிக்கொண்டு ஒருவர் வலம் வருகின்றார். எமது பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் அன்று முன்னெடுக்கப்பட்ட அஹிம்சைவழி போராட்டத்தின் பிரதிபலனாகவே இந்த உரிமைகள் கிடைக்கப்பெற்றன. மாறாக எவரும் தங்கதட்டில் வைத்து இவற்றை தரவில்லை. அவரின் தந்தையைக்கூட எமது பெருந்தலைவரே காப்பாற்றினார் என்பதை மறந்துவிடக்கூடாது.

அதுமட்டுமல்ல பிரஜாவுரிமை பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே முழுமையாக முற்றுப்புள்ளி வைத்தார் என்பதையும் நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். எனவே, மலையக மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்தக்கூடிய அதேபோல செய்யக்கூடிய வகையிலான உறுதிமொழிகளை வழங்கியுள்ள தலைவரை ஆதரிக்க வேண்டியது எமது பொறுப்பாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

பரிட்சித்து பார்ப்பதற்கு இது பிரதேச சபைத் தேர்தல் அல்ல, நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற ஜனாதிபதி தேர்தலாகும். எனவே, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த அனுபவமுள்ள ஒரு தலைவரின் பின்னால் அணிதிரள்வோம். அப்போதுதான் நாடும், நாமும் மேம்பட முடியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.