சகல மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் உறுதி.
“அரசமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும். நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களினதும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற இலங்கையின் அப்போஸ்தலிக்க ஆயர் பதவிப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுதந்திய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி கர்பி டி லெனரோல் ஆயர் தலைமையில் 160 மாணவர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன.
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் இருந்து சுமார் 800 இலங்கை அப்போஸ்தலிக்க பாதிரிமார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இன, மத விடயங்களை அடிப்படையாக கொண்டு தாம் தேர்தல் பணிகளை நடத்துவதில்லை எனவும், மதத்தை எப்போதும் அரசிலிருந்து பிரித்து வைத்து, அனைத்து மதத்தினருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து மத மக்களும் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சுதந்திர அப்போஸ்தலிக்க மறைமாவட்ட ஆயர் பேரவையின் சிடொனின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி கிர்பி டி. லனரோல் அருட்தந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த தசாப்தத்தில் அப்போஸ்தலிக்க ஆயர் பீடத்துக்கு அருட்தந்தை லனரோல் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார்.
நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மத விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தார்.
இலங்கையில் கிறிஸ்தவ சமூகத்தின் வெற்றிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பல நூற்றாண்டுகளாக நாட்டில் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்டார்.
தமது மதத்தைக் கடைப்பிடிக்கும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அனைத்து மதத்தினருக்கும் சமமான வசதிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மத நடைமுறைகளின் எதிர்காலம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களில் டிஜிட்டல் யுகம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என இரண்டு முக்கிய சவால்களைச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக டிஜிட்டல் ஊடகங்களால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு உளவியல் ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இளைஞர்கள் தொடர்பான அண்மைக்கால பிரச்சினைகளுக்குரிய நிகழ்வுகளை எடுத்துரைத்துடன், இப்பிரச்சினைகளைத் தீர்க்க மத மற்றும் சமூகத் தலைவர்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.
எதிர்வரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விடயத்தைக் கருத்தில்கொண்டு செயற்படுவதே சிறந்தது எனவும், மதப் பின்னணி எதுவாக இருந்தாலும் அனைத்து மக்களின் தேவைகளையும் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.