சர்ச்சைப் பேச்சு தொடர்பில் மகாவிஷ்ணு கைது
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவாகியுள்ள வழக்கின் பேரில் மகாவிஷ்ணு கைதாகி உள்ளார். ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
தன்னம்பிக்கை பேச்சாளர் என்று தன் ஆதரவாளர்களால் குறிப்பிடப்படும் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து சனிக்கிழமை அன்று சென்னை வந்தபோது விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற மகாவிஷ்ணு பேசிய கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பான காணொளிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து கொந்தளிப்பு அதிகமானது.
மகாவிஷ்ணுவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மகாவிஷ்ணு மீது காவல்துறையில் உரிய வகையில் புகார் அளிக்கப்படும் என்றார். மேலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சாதி, மதம் பார்க்காத அமைதியான மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்நிலையில் மூடநம்பிக்கையைத் தூண்டும் வகையில் பேசுவதை ஒருபோதும் ஏற்க இயலாது.
“அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நம்முடைய மிகப்பெரிய கடமை. ஒவ்வொரு குடிமகனும் அறிவுசார்ந்து சிந்திக்க வேண்டும் என்பது நமது அரசியல் அமைப்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று அன்பில் மகேஷ் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாவிஷ்ணு வாக்குமூலம்
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மகாவிஷ்ணு, தான் சித்தர்கள் ஆசீர்வாதத்தால் சொற்பொழிவுகள் நடத்தி வருவதாகவும் தனது யூடியூப் ஒளிவழியை 5 லட்சம் பேர் பின் தொடர்வதாகவும் காவல்துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பரம்பொருள் பவுண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் மூலமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும் 5 நாடுகளில் இது போன்ற சொற்பொழிவுகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் தான் பேசினேன். இது போன்று பல இடங்களில் நான் பேசியிருக்கிறேன்,” என மகாவிஷ்ணு காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.