சந்திரகுமாரின் கட்சியின் பதிவு தேர்தல் ஆணைக்குழுவால் இரத்து.

சந்திரகுமார் தலைமையிலான அரசியல் கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி 3 வருடங்களுக்கு முன்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கடசியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் முதல் இன்று வரை அந்தக் கட்சியின் கணக்கு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்சி சமர்ப்பிக்கவில்லை. கணக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு 3 தடவைகள் கடிதம் அனுப்பியும் பதில் அளிக்காத காரணத்தினாலேயே தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு சமத்துவக் கட்சியின் பதிவை நீக்கியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2024.07.29 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச இதழில் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் சமத்துவக் கட்சி உட்பட 78 கட்சிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதன்பின்னர் எம்பிலிப்பிட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பின் பின்னர் 2024.08.26 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிட்ட 2399/14 இலக்க அரச இதழில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் சமத்துவக் கட்சியின் பெயர் நீக்கப்பட்டு 77 அரசியல் கட்சிகளின் பெயர்ப்பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது.

முருகேசு சந்திரகுமார் தலைமையிலான அரசியல் கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் சின்னமாக கேடயம் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தக் கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்திரகுமாரின் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.