தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கை ஞாயிறன்று வரும் என்கிறார் மாவை.

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி (ஞாயிறன்று) அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் விசேட குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதன் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஏற்கனவே சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏற்கனவே 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் எமது மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், என்ன அடிப்படையில வாக்களிக்க வேண்டும், அதற்காகக் கட்சி ரீதியான கொள்கை, எமது இனப்பிரச்சினைத் தீர்வு, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பவற்றுக்கு ஆதரவான அறிக்கையை நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதனடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த தேர்தல் அறிக்கை காரணமாக வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக கொள்கை அடிப்படையில் இணக்கம் ஏற்பட்டு, அதில் எங்களுக்கும், அவருக்கும் இணக்கம் ஏற்படக் கூடிய விடயங்களை அடையாளப்படுத்தி எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன் அல்லது 15 ஆம் திகதி கூடி ஆராய்ந்து பொது மக்களுக்காக அறிக்கையை வெளியிடவுள்ளோம்.” – என்றார்.

இதன்போது, ”நீங்கள் ஒரு கட்சியினுடைய தலைவர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து தாங்கள் கருத்து வெளியிட்டு இருந்தீர்கள். ஆனால், உங்கள் கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு என அறிவித்துள்ளது. இது பொதுமக்களைக் குழப்பதா?” – என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

”நாங்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கூறவில்லை. நான் ஆரம்பத்திலும் கூறிய கருத்து கட்சி கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் எடுத்த தீர்மானம் என்ன என்ற விளக்கம் எனக்குத் தேவைப்பட்டிருந்தது. அப்போது கட்சி முன்வைத்த கருத்தை ஆராய்ந்து அதனை மக்கள் மத்தியில் முன்வைப்போம் எனத்தான் கூறினேன். பத்திரிகை ஒன்று ஏதோ தேடிப் பிடித்து தலைப்புச் செய்தியாக ஒன்றைப் பிரசுரித்ததைப் பார்த்து நான் மாறுபட்டு சொன்னேன் எனக் கூற முடியாது. இப்பொழுதும் கட்சி எடுத்த முடிவு தொடர்பில் பேசினோம். இறுதி முடிவுதான் முக்கியமானது. இன்றும் அதில் என்ன மாற்றங்கள், திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் கதைத்துள்ளோம். அதற்குப் பொருத்தமாக அறிக்கையைப் பொதுமக்களுக்கு வழங்குவோம். கட்சியின் பலம், மக்களின் பலம் என்பவற்றை ஆராய்ந்து ஜனநாயக ரீதியாக அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ப பொருத்தமான ஓர் அறிக்கையை தேவைப்பட்ட திருத்தங்களுடன் இறுதியாக வெளியிடுவோம். அதுதான் எமது இறுதி அறிக்கையாக இருக்க முடியும். அது பற்றியே பேசி வருகின்றோம்” – என்று மாவை பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.