சிறுவர் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு வயது வரம்பை நிர்ணயிக்க ஆஸ்திரேலியா திட்டம்.
சமூக ஊடகங்களைச் சிறார்கள் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டால், இளம் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், உடல் சோர்வு ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான சட்டம் இவ்வாண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன், வயது சரிபார்ப்பு சோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
குறைந்தபட்ச வயது குறித்த விவரத்தை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட வயதாக அது இருக்கலாம் என அவர் சொன்னார்.
“சிறார்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, வெளிப்புற விளையாட்டுகள், நீச்சல், பூப்பந்து போன்றவற்றில் ஈடுபடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்,” எனத் திரு அல்பனிஸ் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகமான ‘ஏபிசி’ தெரிவித்தது.
“சமூக ஊடகங்கள் சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பதாக நாங்கள் அறிந்தோம். சிறார்கள் நிழல் உலகத்திலிருந்து விலகி, உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வயது வரம்பை நிர்ணயித்த உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா திகழும்.
மெட்டா, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிக்டாக், யூடியூப் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு குறித்து எந்தவொரு கருத்தும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதற்குப் பின்னரே இந்த வயது வரம்பு நிர்ணயிக்கும் திட்டம் குறித்து அந்நாட்டுப் பிரதமர் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவாதத்தின்போது சமூக ஊடகங்களால் இளம் வயதினருக்கு ஏற்படும் மோசமான மனநல பாதிப்புகள் குறித்துப் பேசப்பட்டது.