நிதி மோசடி தொடர்பாக அருந்திக 5 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணை.
30 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான முறைப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகளை மேற்கொண்ட நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் என்று கூறப்படும் வாய்க்கலையைச் சேர்ந்த ரொஸான் சேனாநாயக்க மற்றும் கொச்சிக்கடையைச் சேர்ந்த மொஹமட் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதான நீதவான் ரக்கித அபேசிங்கவினால் தலா 10 இலட்சம் சரீர பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோசடி செய்யப்பட்ட தொகையில் 50000 ரூபாவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தரகர் முறைப்பாட்டாளரிடம் செலுத்தியதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில் முறைப்பாட்டாளர் தெரிவித்த தகவலின்படி, இராஜாங்க அமைச்சர் ஊடாக அவுஸ்திரேலியா செல்ல முடியும் என மொஹமட் தெரிவித்ததோடு அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 5ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் முறைப்பாட்டாளரினால் வழங்கப்பட்ட இவரின் பெயரிலும் அமைச்சரின் பெயரிலும் இரண்டு வங்கிக் கணக்குகளில் பன்னிரெண்டு இலட்சம் ரூபாவும் 495000 ரூபாவும் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், இடைத்தரகருக்கு பன்னிரெண்டு இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அமைச்சர் வெளிநாடு செல்லும் அன்று விஐபி டெர்மினலில் இருந்து அவருடன் விமான நிலையத்திற்குள் நுழையுமாறு பெண் அறிவுறுத்தப்பட்டதாகவும், குறித்த நாளில் உறவினர்களுடன் விமான நிலையம் வரும் போது பின்னால் வருமாறு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஆவணங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண்ணை விமானத்தில் ஏற குடிவரவு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறுதியளித்தபடி அவுஸ்திரேலியா செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாத நிலையில், தன்னிடம் இருந்து பெற்றுக்கொண்ட பணத்தை மீள வழங்குமாறு கோரியதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண் நீர்கொழும்பு பிரிவு மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஒருங்கிணைப்பு அதிகாரியின் விசாரணையின் போது, தனது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள 15 இலட்சம் ரூபாவை இராஜாங்க அமைச்சருக்கு வழங்கியதாக அவர் தெரிவித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பிரிவின் மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொள்ளவுள்ளனர்.