மகளின் தலையில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய தந்தை.

மகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, தந்தை ஒருவர் கையாண்டுள்ள வழியை இணையவாசிகள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த அந்த தந்தை, தம் மகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அந்த மகளின் தலை மீது கண்காணிப்பு கேமரா ஒன்றைப் பொருத்தியுள்ளார்.

நேர்காணலில் பேசிய அந்த மகள், தாம் என்ன செய்கிறார், எங்கே செல்கிறார் என்பதைத் தம்முடைய தந்தை அறிந்திட இவ்வாறு செய்ததாகக் கூறினார்.

இந்த கேமராவை எங்கிருந்து வேண்டுமானாலும் அந்த தந்தை தமது கைப்பேசியில் 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.

தந்தை இவ்வாறு கேமராவைப் பொருத்தும்போது மறுப்பு தெரிவித்தாரா என்று அந்த மகளிடம் பேட்டி கண்டவர் கேட்டபோது, அவர் இல்லை என்றார்.

தம் தந்தை தமக்குப் பாதுகாவல் அதிகாரி என்று கூறிய அந்த மகள், கராச்சியில் ஒரு பெண் கொல்லப்பட்டதாகவும் தமக்கு அந்நிலை நேர்ந்துவிடக்கூடாது என்பதால் தம்முடைய பெற்றோர் இந்தப் புத்தாக்க யோசனையை நடைமுறைப்படுத்த முடிவெடுத்ததாகவும் சொன்னார்.

எவரும் பாதுகாப்பாக இல்லை என்று குறிப்பிட்ட அந்த மகள், தாமும் கொல்லப்படலாம் என்ற சாத்தியத்தை எடுத்துக் கூறினார்.

அவரது பேச்சைக் கொண்ட காணொளி, ‘எக்ஸ்’ தளத்தில் ‘உச்சக்கட்ட பாதுகாப்பு’ என்ற வாசகத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து இதுவரை 17,000 பார்வைகளைப் பெற்றுவிட்டது.

இந்தச் செயல் அந்தப் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக ஒரு சாரார் பாராட்டினாலும் மறு சாரார் இதைச் சாடியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.