தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட ரணில்! – விளாசித் தள்ளிய சஜித்.
“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தைச் சுருக்கி மக்களின் மீது சுமையை அதிகரித்து மக்களை அழுத்தத்துக்கு உட்படுத்துகின்ற கொள்கைத் திட்டமொன்றைப் பின்பற்றுகின்றார். அத்தோடு என்னைத் தோல்வியடையச் செய்து அநுரகுமார திஸாநாயக்கவை வெற்றியடையச் செய்வதற்கு அநுரகுமாரவுடன் வித்தியாசமான கூட்டமைப்பு ஒன்றையும் ரணில் ஏற்படுத்திக்கொண்டுள்ளார். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவார் என்பதனை ரணில் ஏற்றுக்கொண்டுள்ளார்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 43 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ரணிலும் அநுரவும் சிறந்த அரசியல் டீல் ஒன்றைச் செய்திருக்கின்றார்கள். அவர்களுடைய டீல் தொடர்பில் எனக்குப் பிரச்சினை இல்லை. எனக்கு 220 இலட்சம் மக்களுடனே டீல் இருக்கின்றது. இந்த மக்களை வீழ்ந்துள்ள இடத்திலிருந்து மீட்டெடுப்பதே எனது எதிர்பார்ப்பு.
சஜித் பிரேமதாஸ என்பவர் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும், வரங்களுக்காகவும் விலை போகின்றவர் அல்லர். 220 இலட்சம் மக்களின் நம்பிக்கையை வென்றவராக ஆத்ம கௌரவத்தைப் பாதுகாத்துச் செயற்படுகின்ற ஒருவராவார்.” – என்றார்.