ரணிலை ஆதரிப்பதுதான் அனைவருக்கும் ஒரே வழி – பரப்புரைக் கூட்டத்தில் தயா கமகே தெரிவிப்பு.

இலங்கையில் இனியும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதுதான் அனைவருக்கும் உள்ள ஒரே வழி என்று முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த 15 – 20 வருடங்களில் தமிழ் மக்கள் திருக்கோவில், கல்முனை, நாவிதன்வௌி உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்தாலும், போதியளவு பொருளாதார வலுவை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, மக்களின் வளங்களை மேம்படுத்தும் நோக்கிலேயே இன்று அனைத்து கட்சியினரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கின்றோம்.

இந்தப் பகுதி மக்களின் கஷ்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதியின் ஊடாக இப்பகுதியின் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கிலேயே இன்று இங்கு கூட்டத்தை ஏற்படுத்தினோம். இந்தப் பகுதி மக்கள் நாட்டின் நெல் உற்பத்தியில் பெருமளவான பங்களிப்பை வழங்குகின்றார்கள். திருகோணமலையில் அமைக்கப்படும் தொழில் வலயத்தை அம்பாறை வரையில் விரிவுபடுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார்.

எதிர்த்தரப்புகளில் இருந்த மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் வெற்றிக்காக ஒன்றுபட்டிருப்பதால் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் ஒன்றுமையாக முன்னெடுக்க முடியும். எனவே, இரு வருடங்களுக்கு மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் இனியும் வரக்கூடாது என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் அமர்த்த வேண்டியது அவசியமாகவுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.