வடக்கில் உள்ள தமிழ் பிள்ளைகளையும் கவனியுங்கள் – சஜித்திடம் போரில் இறந்த இராணுவ வீரரது மகளது கோரிக்கை (Video)
கடந்த செப். 10 சுகததாச உள்விளையாட்டு அரங்கில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “திவிதென ரணவிரு” தேசிய மாநாடு நடைபெற்றது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஓய்வுபெற்ற இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் 5000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு போரில் உயிரிழந்த ராணுவ வீரர் ஒருவரின் மகளின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
வீரமரணம் அடைந்த போர் வீரனின் மகள் செவ்வினி உரேஷாவின் பேச்சு இது ;
இப்படி ஒரு சபைக்கு நடுவில் நான் பேசுவது என் வாழ்க்கையில் இதுவே முதல் முறை. எனக்கு அந்த வாய்ப்பை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிகுரக்கொட போன்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த இன்னொருவரும் இந்த நிகழ்விற்குச் செல்ல வேண்டும் என என்னை நம்ப வைத்த ஒருவர் உள்ளார்.
அவர் எனது நாட்டின் அடுத்த சகாப்தத்தின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள். இந்த நிகழ்ச்சிக்கு செல்லுமாறு மற்றொருவர் என்னை வற்புறுத்தினார். அவர் நான் இரண்டு வயதும் ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது போரில் நான் இழந்த எனது தந்தை. இங்கிருக்கும் மாமிமார்கள் , மாமாக்களைப் போல என் அப்பாவும் எங்கிருந்தோ என் கதையைக் கேட்டுக் கொண்டிருப்பார்.
யுத்தத்தில் நாடு இழந்த விடயங்கள் ஏராளம். எனக்கும், என் அம்மாவுக்கும், என் தங்கைக்கும் ஒரு தந்தையை இழந்தோம். போர் பற்றி எனக்கு அதிகம் நினைவில் இல்லை. ஆனால் என் தந்தையை போரில் இழந்த வலி எனக்கு இன்றும் நினைவிலிருக்கிறது. அதனால்தான் அந்த வலி நிறைந்த கடந்த காலத்தைச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சொல்ல சில விஷயங்கள் உள்ளன. அந்த வலியுடன் பிணைக்கப்பட்ட எங்கள் வாழ்க்கையைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் போரில் இறந்த ஆயிரக்கணக்கான தந்தைகளின் ஆயிரக்கணக்கான மகள்கள் இருப்பார்கள். அவர்களில் ஏதோ ஒரு காரணத்தால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என நான் நினைக்கிறேன். எனவே, நான் அந்த குழந்தைகள் அனைவரையும் நான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.
கௌரவ சஜித் பிரேமதாச அவர்களே,
போரில் தந்தைகளை இழந்த ஒவ்வொரு குழந்தையின் கதையையும் உங்கள் முன் முன்வைக்கிறேன்.
எனது தந்தை போரில் இறந்தபோது, அவரது உடலைக் கூட நாங்கள் பார்க்கவில்லை. சீல் வைக்கப்பட்ட பெட்டியில் எங்கள் சிறிய வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். அந்தப் பெட்டியின் மேல் தேசியக் கொடி இருந்தது. ராணுவத்தின் வீர வணக்கத்துக்கு நடுவே அப்பா மாவீரனாக அடக்கம் செய்யப்பட்டார். அவர் எனக்கு இன்னும் ஹீரோ.
அப்படி அடக்கம் செய்யப்பட்ட ஆயிரம் அப்பாக்களின் பிள்ளைகளின் சந்ததிகளை யார் கவனிப்பது? அந்த தலைமுறையின் தேவைகளை யார் கவனிப்பார்கள்? சஜித் பிரேமதாச அவர்கள் எமது நாட்டின் தலைவராக நீங்கள் இருக்கும் காலத்தில் வீரமரணம் அடைந்த அந்த மாவீரர்களின் பிள்ளைகளின் சந்ததியை தேடி பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நான் ஹிகுரக்கொட ஆனந்த பெண் பள்ளிக்கு சென்றேன். நான் உயர்நிலைப் பள்ளியில் கலைப் பிரிவில் படித்தேன். நான் இரண்டு B சித்தியுடன், ஒரு C சித்தியடைந்தாலும், யுத்தத்தில் இறந்த எனது தந்தையின் ஓய்வூதியத்தைக் கொண்டு எங்களால் மேற்கொண்டு கல்வி கற்க முடியவில்லை.
என் சகோதரி என் தாயின் வயிற்றில் இருக்கும் போது என் தந்தையை இழந்தார். இப்போது நான் படித்த பள்ளியில் உயர்நிலையில் படிக்கிறார். அவளுடைய படிப்புக்காக , என் படிப்பை நிறுத்திவிட்டு கிராமத்தில் உள்ள ஹார்டுவெயார் கடையில் வேலைக்குச் சென்றேன். இப்போது எனக்கும் சிறிய சம்பளம் கிடைக்கிறது. அப்பாவின் சம்பளத்திலும், என் சம்பளத்திலும் தங்கைக்குக் கற்றுக் கொள்ள விட்டு அம்மாவுடன் வாழ்கிறோம். இது என் கதை என்றாலும், இது நம் அனைவரின் கதை.
சஜித் பிரேமதாச போன்ற எமது மக்களின் தலைவர் அந்தக் கதைக்கான புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பார் என நான் நம்புகிறேன்.
அதற்கு , முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க போன்றவர்கள் தலைமை தாங்குவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
போரினால் பாதிக்கப்பட்ட எம்மைப் போன்ற வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பிள்ளைகளையும் மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
“சஜித் யுகம்” அத்தகைய பொற்காலமாக இருக்கும் என்று நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமுறை நம்புகிறது.
யுத்தத்தில் தந்தையை இழந்த எமது தலைமுறையினரின் கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்பன சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் மாவீரர் அமைப்பின் தலையீட்டிலும் நிறைவேற்றப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன். அந்த நோக்கத்திற்காக திரு.சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்கிறோம்…
நன்றி!