விடுதி தீ விபத்தில் இரு பெண்கள் பலி.
மதுரையில் தனியார் பெண்கள் தங்குவிடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, இரண்டு ஆசிரியைகள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 12ஆம் தேதியான நேற்று அதிகாலை, இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் அந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மதுரை கட்ராபாளையம் பகுதியில் அந்த தனியார் பெண்கள் தங்குவிடுதி இயங்கி வருகிறது. வியாழக்கிழமை அதிகாலை விடுதியில் உள்ள ஓர் அறையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பதனப்பெட்டி ஒன்று, திடீரென வெடித்ததாகவும் அப்போது ஏற்பட்ட தீ விடுதியின் மற்ற பகுதிகளுக்கு வேகமாகப் பரவியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அலறியடித்து ஒட்டம்பிடித்தனர். பலர் விடுதியை விட்டு வேகமாக வெளியேறிய நிலையில், 50 வயதான பரிமளா சுந்தரி, 22 வயதான சரண்யா ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியைகளாகப் பணியாற்றி வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தின்போது ஏற்பட்ட கரும்புகையில் சிக்கி சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விடுதி இயங்கி வந்த கட்டடம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் கட்டடத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் உடனடியாக அதனை இடித்துவிடுமாறும் மதுரை மாநகராட்சி கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே எச்சரிக்கைக் கடிதம் கொடுத்திருந்தது.
ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் விடுதி நிர்வாகம் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.