மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) காலமானார். அவருக்கு வயது 72. மனைவி சீமா சிஷ்டி யெச்சூரி, இரண்டு பிள்ளைகளை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி, நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் சுவாசத் தொற்றுப் பிரச்சினையால் ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாச உதவியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த 32 வருடங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினராக இருந்தவர் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான யெச்சூரி.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் 1952ல் சென்னையில் பிறந்தார். ஆந்திரா, டெல்லியிலும் படித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையின் முதுகலைப் படிப்பை மேற்கொண்டபோது மாணவர் சங்கத்தின் தலைவரானார். அப்போது மார்க்சியக் கொள்கைகளைக் கைப்பற்றினார். 1974இல் இந்திய மாணவர் கூட்டமைப்பின் (SFI), CPI(M) மாணவர் அமைப்பில் உறுப்பினரானார். அடுத்த ஆண்டே கட்சியின் உறுப்பினரானார், சில மாதங்களுக்குப் பிறகு அவசரநிலையின் போது கைது செய்யப்பட்டார். 2015ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத்தை தொடர்ந்து அவர் பதவியேற்றார். 2005 முதல் 2015 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.அவருக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“இந்தியா என்ற கருத்தின் பாதுகாவலர், நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருந்தார். எங்களுக்கிடையிலான நீண்ட விவாதங்கள் இனி நடக்காது,” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“மூத்த அரசியல்வாதியான சீதாராம் யெச்சூரியின் மறைவு தேசிய அரசியலுக்கு ஒரு இழப்பு,” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிவிட்டிருக்கிறார்.