2 மணி நேரமாக காத்திருந்தேன்… மருத்துவர்கள் யாரும் வரவில்லை – மம்தா பானர்ஜி
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்ற 31 வயது பெண் பயிற்சி மருத்துவர், கடந்த 9ஆம் தேதி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநிலத்தில் இளநிலை மருத்துவர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அந்த மாநில அரசு போராட்டக்காரர்களை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள போராடும் மருத்துவர்கள் சில நிபந்தனைகளை முன்வைத்தனர்.
அந்த நிபந்தனையில், மாநில முதல்வர் மம்தா பானார்ஜி பங்கேற்க வேண்டும். பேச்சுவார்த்தை நேரடியாக ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்பனவற்றை முன்வைத்தனர். இதில், மாநில அரசு, முதல்வர் பங்கேற்பார். ஆனால், நேரடியில் ஒளிப்பரப்பு செய்ய முடியாது. அதேசமயம், பேச்சுவார்த்தை முழ்வதும் பதிவு செய்யப்படும் என தெரிவித்து, அரசு தரப்பில் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், இந்தச் சந்திப்பில், 30 நபர்கள் பங்கேற்பாளர்கள் என மருத்துவர்கள் தரப்பில் வைத்த கோரிக்கையில் 15 மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி என அரசு பதில் கொடுத்து அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பை ஏற்று மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் சந்திப்பு நிகழ்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்ற மருத்துவர்கள் தன்னை சந்திக்க வரவில்லை மாநில முதலமைச்சர் மம்தா பானார்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மம்தா பானார்ஜி, “நாங்கள் இரண்டு மணி நேரமாக நமது மருத்துவ சகோதர சகோதரிகளைச் சந்திக்க காத்திருக்கிறோம். நாங்கள் கடிதம் எழுதினோம். அவர்களும் அதனை ஏற்று வருவதாக உறுதி கொடுத்தனர். அவர்கள் உறுதி அளித்ததை அடுத்தே நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், தற்போது இரண்டு மணி நேரமாக காத்திருந்தும் அவர்கள் வரவில்லை. மேலும், அவர்களிடம் இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் திறந்து பேசலாம் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். பேச்சுவார்த்தையால் மட்டுமே எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும்.
எங்களை இரண்டு மணி நேரமாக காக்க வைத்ததாலும், பேச்சுவார்த்தைக்கு வராததாலும் அவர்கள் மீது எந்த நவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்பதை நான் தற்போதும் சொல்கிறேன். மூத்தவராக நான் அவர்களை மன்னிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.