கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தேர்தலையொட்டி உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இருப்பினும் இந்த வழக்கில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் செப். 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பு இன்றைய தினத்துக்கு(செப்.13) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வு, கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ‘பிணையத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், இந்த வழக்கைப் பற்றி பகிரங்கமாக எந்த கருத்தும் வெளியில் பேசக் கூடாது, விசாரணை நீதிமன்றத்தின் அனைத்து விசாரணைகளுக்கும் ஆஜராக வேண்டும்’ என்று நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
நீண்ட காலமாக சிறையில் இருப்பது அநியாயமாக சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், கேஜரிவாலின் கைது சட்டப்பூர்வமானது, எந்த விதிமுறை மீறல்களும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் நீதிபதி புயான், சிபிஐ கைது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ’22 மாதங்களாக கேஜரிவாலை சிபிஐ கைது செய்யவில்லை, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர் உடனடியாக கேஜரிவால் கைது செய்யப்பட்டதன் அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
எனினும் இரு நீதிபதிகளும் ஒருமனதாக கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளனர்.