சகல முஸ்லிம் அமைப்புகளும் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு – முஸ்லிம் இடதுசாரி முன்னணி அறிவிப்பு.

இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு என்று முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம்.பைசால் தெரிவித்தார்.
கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய காலகட்டத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம், பேர்கர் என அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் எமது நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஏனெனில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை நெருக்கடியில் இருந்து வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் எமது மக்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கனவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணுகின்றார். கொழும்பு பிரதேசத்தில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம், பேர்கர் மக்களைப் போன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களும் வாழ வேண்டும் என்பதே அவரின் எண்ணமாகும்.
தற்போது அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கின்றன என்றே கூற வேண்டும்.” – என்றார்.