பிரேமதாஸ உயிருடன் இருந்திருந்தால் ரணிலுக்கே ஆதரவு வழங்கியிருப்பார் – முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவிப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இப்போது உயிருடன் இருந்திருந்தார் என்றால் அவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவளித்திருப்பார் என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.
கெஸ்பேவவில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தலதா அத்துகோரல மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பதவி வாங்க நான் விரும்பவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே எமக்கு அரசியல் கற்பித்தார். இன்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் பலர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்ள முடியுமா என்ற சந்தேகத்துடன் இருக்கின்றார்கள். நாம் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே எமது தலைவராவார்.
ரணசிங்க பிரேமதாஸ இப்போது உயிருடன் இருந்திருந்தார் என்றால் அவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவளித்திருப்பார். அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அவரைப் பாதுகாத்தார். எனவே, பிரேமதாஸவின் குடும்பத்தார் நன்றி மறந்தாலும் அவர் உயிரோடு இருந்திருந்தால் நன்றிக்கடன் செலுத்தியிருப்பார்.
எனவே, பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்பட்ட மக்களும் அந்தக் கஷ்டங்களுக்கு முடிவு கட்டிய தலைவரான ஜனாதிபதி ரணிலை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.” – என்றார்.