தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம்.
தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.
வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்கான தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை நிகழ்ச்சித் திட்டம் – 2020/2021 தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தெளிவூட்டும் கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் நேற்று(06) மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் அவர்கள் குறித்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார்.
குறித்த நிகழ்ச்சித் திட்டமானது பலமான வீட்டுப் பொருளாதார அலகுகள் ஊடாக குடும்ப அலகுகளை வலுப்படுத்தல். நஞ்சற்ற உணவு உற்பத்தியினை அதிகரித்து உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல். வீட்டுத் தோட்டத்தின் மூலம் நுகர்வுச் செலவுகளை குறைத்தல். மேலதிக வருமானத்தை பெற்றுக்கொடுத்தல். வரையறுத்த நிலப்பகுதி மூலம் அதிகபட்ச பயனைப் பெற்றுக் கொள்ளுதல். நிலைபேறான வீட்டுப் பொருளாதார எண்ணக்கருவை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை கொண்டுள்ளது.
இந் நிகழ்ச்சித் திட்டத்தில் கீரை வகைகள், கொடிப் பயிர்கள், கிழக்கு வகைகள், பல்லாண்டுத் தாவரங்கள், ஏற்றுமதிப் பயிர்கள், வீட்டுத்தோட்டத்தில் பயிரிட முடியுமான பெறுமதியான தாவரங்கள், மருத்துவத் தாவர வகைகள், காளான் பயிர்ச்செய்கை, தேனீ வளர்ப்பு, கால் நடை மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கியுள்ளது.
மஞ்சள் மற்றும் இஞ்சி பயிர்ச் செய்கையினை பிரதேச மட்டங்களில் ஊக்குவிப்பதற்காக விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
கமத்தொழில் திணைக்களம், ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்புத் திணைக்களம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், தென்னை அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை, ஆயுள்வேதத் திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் இத் திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், சுகாதார வைத்திய அதிகாரி, உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வடமாகாண விவசாய திணைக்கள போதனாசிரியர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர், காணி பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்கள உத்தியோகத்தர் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.