சுவிஸ், அதானி குழுமம் வங்கியில் வைத்திருந்த 310 மில்லியன் டாலர் தொகையை முடக்கியது

இந்தியாவின் பிரபல அதானி குழுமம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைத்திருந்த 310 மில்லியன் டாலர் தொகையை அந்நாட்டு அதிகாரிகள் முடக்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட இத்தகவலால் இந்திய அரசியல், பொருளியல் தளங்களில் புதுப் பரபரப்பு நிலவுகிறது. எனினும், அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் புலனாய்வு செய்தி வலைத்தளம் ஒன்றில் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு முக்கியமான செய்திகள் வெளியான நிலையில், அவற்றின் அடிப்படையில் இத்தகவலை தெரிவித்ததாக ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அதானி குழுமத்தின் மீதான பண மோசடி, சொத்து பத்திரங்கள் மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், இந்த விசாரணையின் ஒரு பகுதியாகவே அந்நிறுவனத்துக்கு தங்கள் நாட்டு வங்கிக் கணக்குகளில் இருந்த ஏறத்தாழ 310 மில்லியன் டாலர் தொகையை சுவிஸ் அதிகாரிகள் முடக்கி இருப்பதாக ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தற்போது இந்த விவகாரமானது, சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் தங்கள் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக அதானி குழுமம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தாங்கள் நிராகரித்ததாகவும் அதானி குழுமம் சுவிட்சர்லாந்தில் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அதானி குழுமத்தின் எந்தவொரு வங்கிக் கணக்கும் அதிகாரிகளால் முடக்கப்படவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

“இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவொரு விளக்கம் கோரியும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெறவில்லை. வெளிநாட்டு சட்ட திட்டங்களை ஏற்று அதானி குழுமம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது,” என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் அதானி நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பங்குச்சந்தையில் முறைகேடுகள் செய்ததாகவும் அக்குழுமத்துக்கு அதிக அளவிலான கடன் சுமை உள்ளது என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்தது.

மேலும், இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’ தலைவருக்கும் அதானி குழுமத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் ஹிண்டன்பர்க் வெளியிட்ட பல்வேறு தகவல்களால் அதானி குழுமத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

அவற்றில் இருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில், சுவிஸ் வங்கிக் கணக்கு தொடர்பான புது நெருக்கடி உருவாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.