யாழ். நாவாந்துறையில் மக்கள் முன்னிலையில் ரணில் தெரிவிப்பு சஜித் அல்லது அநுரகுமாரவிடம் வடக்குக்கான தீர்வு கிடையாது!

அரசியல் பிரச்சினைக்கு மட்டுமன்றி அபிவிருத்திப் பிரச்சினைக்கும் தீர்வு வழங்குவேன்

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்படும்
– காணாமல்போனோரின் பிரச்சினைக்கு அடுத்த 5 வருடங்களில் முழுமையான தீர்வு
– மாகாண சபைகளுக்கு எதிராக அநுரகுமார தெற்கில் பெரும் போராட்டம் முன்னெடுத்தார்
– தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தபோது அனைவருக்கும் எதிர்பார்ப்பை அளித்தது நான்தான்.
– ஐ.எம்.எப். திட்டத்தை தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என்று ஐ.எம்.எப். எச்சரித்துள்ளது.

“வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. வடக்குக்கு அபிவிருத்தியும் அவசியம். இல்லையெனில் ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும். வடக்கின் அபிவிருத்தியைப் போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்க்கிரமசிங்க தெரிவித்தார்.

மாகாண சபைகளை வலுப்படுத்தி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும், மத்திய அரசுக்கு உதவும் வகையில் 9 மாகாண சிற்றரசுகளின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனவும், நவாஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக எதிர்வரும் 5 வருடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று சனிக்கிழமை “ரணிலால் இயலும்” என்ற தொனிப்பொருளில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார எவ்வாறு தென்னிலங்கையில் மாகாண சபைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில், இன்று யாழ்ப்பாணம் வந்து மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் நம்பிக்கை இழந்திருந்த நிலையில் அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதற்காகத் தாம் பாடுபட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“இயலும் ஸ்ரீலங்கா” திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்காலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், தற்போது நாட்டின் பொருளாதார வாயில்கள் திறந்துள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாகத் தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் நேற்று விடுத்த எச்சரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இன்னும் 3 வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எவராலும் உடைக்க முடியாது எனத் தெரிவித்த சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று வடக்குக்கு அவசியம் எனவும், சஜித் பிரேமதாஸவிடமோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவிடமோ அதற்கான தீர்வு இல்லை எனவும் குறிப்பிட்டார்.

“காஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினாலும் காஸும் இல்லை. யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்தியும் இல்லை” எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.