அநுரவையும் சஜித்தையும் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்! – யாழ். நாவாந்துறை பிரசாரக் கூட்டத்தில் திலீபன் எம்.பி. வலியுறுத்து.
“அன்று ஓடி ஒழிந்து விட்டு இன்று ஆட்சியைக் கோரும் அநுரகுமாரவையும் சஜித்தையும் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். நாம் அளிக்கும் புள்ளடிதான் அதற்கான ஒரே வழி.”
இவ்வாறு ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் சனிக்கிழமை “ரணிலால் இயலும்” என்ற தொனிப்பொருளில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் திலீபன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாம் நன்றி மறந்தவர்கள் அல்லர். பால்மாவுக்கும் காஸுக்கும் மண்ணெண்ணெய்க்கும் வீதி வீதியாக வரிசையில் நின்றதை மறக்க வேண்டாம்.
அநுரகுமாரவைப் போன்று பஸ்களில் சனத்தைச் சேர்க்கும் கூட்டமல்ல இது. ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைப்பதற்கான உண்மையான நன்றிக் கடனுள்ள கூட்டம் இது. அன்று ஓடி ஒழிந்து விட்டு இன்று ஆட்சியைக் கோரும் அநுரகுமாரவையும் சஜித்தையும் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். நாம் அளிக்கும் புள்ளடிதான் அதற்கான ஒரே வழி.
பங்களாதேஷில் 15 மணி நேர மின்வெட்டு அமுலில் உள்ளது. இங்கு இன்று எதற்காவது தட்டுப்பாடு உள்ளதா? மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றதா? சஜித்தோ, அநுரவோ நாட்டை ஏற்றிருந்தால் அரச ஊழியர்களின் சம்பளம் முற்றாகவோ அல்லது பாதியளவோ குறைக்கப்பட்டிருக்கும். ஆனால், அனைத்து சுமைகளையும் தாங்கி அரச ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். எனவே, ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைப்போம்.” – என்றார்.