உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்
உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து திரும்ப முடியாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர், உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷுக்கு, கடந்த 3-ஆம் தேதி ஆன்மிகப் பயணம் புறப்பட்டனர். விமானம் வாயிலாக தார்சுலா சென்ற அவர்கள், ஆதி கைலாஷ் சென்று தரிசனத்தை முடித்துவிட்டு, மீண்டும் தார்சுலாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, தவாகாட் – தானாக்பூர் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அவர்கள் திரும்பி வர முடியாமல் மலைப்பகுதியிலேயே தங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து சென்ற 30 பேரில் 28 பேர் மூத்த குடிமக்களாக இருக்கும் நிலையில், அங்குள்ள ஆசிரமம் ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சாலையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழர்களை மீட்க நடவடிக்கை:
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் 30 பேரையும் மீட்பது தொடர்பாக உத்தராகண்ட் அதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதேபோல், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், கடலூர் மாவட்ட ஆட்சியரும் அங்குள்ள மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.