தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகுவதாக அறிவிப்பு!

தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதாக அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி தொண்டர்களுடன் பேசியுள்ளார்.

தில்லியில் புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால் கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரிய கேஜரிவாலின் மனுவை செப்.13ல் விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது. இதையடுத்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று(செப்.15) புதுதில்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் பேசிய கேஜரிவால், இன்னும் 2 நாள்களில் பதவி விலகவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கூடி, ஆலோசித்து புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். துணை முதல்வராக உள்ள மணீஷ் சிசோடியாவும் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக கேஜரிவால் கூறியுள்ளார்.

மக்களை நேரடியாகச் சென்று சந்திக்கவுள்ளதாகவும், தன்னை நேர்மையானவன் என மக்கள் சான்றளித்தபின் அடுத்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், அதன்பின் மீண்டும் முதல்வர் பதவியேற்றுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி தொண்டர்களுடன் பேசியதாவது, ”பாஜக அல்லாத முதல்வர்கள் மீது மத்திய பாஜக அரசு பொய் வழக்குகளை பதிந்து வருகிறது. ஆம் ஆத்மியால் மட்டுமே பஜகவின் சதியை தாக்குப்பிடிக்க முடியும். ஒருவேளை பிற முதல்வர்களும் கைது செய்யப்பட்டால், அவர்களை பதவி விலக வேண்டாமென வலியுறுத்திக் கொள்கிறேன்.

என்னை கைது செய்ததும் நான் முதல்வர் பதவியிலிருந்து உடனடியாக விலகவில்லை. ஜனநாயகத்துக்கு நான் மதிப்பளித்ததால் ராஜிநாமா செய்யவில்லை. அரசமைப்பே எனக்கு முக்கியம்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் நடத்தப்படும் ஓர் அக்னிப்பரீட்சை இது. பிப்ரவரி மாதத்தில் தில்லி பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம். இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும்போதே தில்லியிலும் தேர்தலை நடத்திட கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.